
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் டெல்லி அணியின் சீனியர் வீரரான கே.எல்.ராகுல் 14 பந்தில் 28 ரன் அடித்தார். இதில் 1 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் கே.எல்.ராகுலின் சிக்சர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்தது.
இதன் மூலம் கே.எல்.ராகுல் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 200 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் (69 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், ஆண்ட்ரே ரசல் (97 இன்னிங்ஸ்) 2வது இடத்திலும் உள்ளனர்.
அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 200 சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியல்;
கிறிஸ் கெயில் - 69 இன்னிங்ஸ்
ஆண்ட்ரே ரசல் - 97 இன்னிங்ஸ்
கே.எல்.ராகுல் - 129 இன்னிங்ஸ்
டி வில்லியர்ஸ் - 137 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் - 148 இன்னிங்ஸ்
கைரன் பொல்லார்டு - 150 இன்னிங்ஸ்
சஞ்சு சாம்சன் - 159 இன்னிங்ஸ்
எம்.எஸ்.தோனி - 165 இன்னிங்ஸ்
ரோகித் சர்மா - 185 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா - 193 இன்னிங்ஸ்