புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு கோவில் பூசாரி கொலை

1 hour ago 1

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவிலில் சாமியாடி குறி சொல்லி அதில் வரும் பணத்தின் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். இவரது மகனும் திருமணமாகி வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் சுந்தர் தனிமையாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் சுந்தர் அவரது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், "சுந்தருக்கும் அவரது எதிர் வீட்டில் வசிக்கும் கொத்தனார் தமிழரசன் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இருவரும் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை தூக்கி சுந்தரின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்" என்று தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழரசனை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article