
ஜெய்ப்பூர்,
ஐ..பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 74 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், அந்த ஓவரை மிகச்சிறப்பாக வீசிய அவேஷ் கான் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் காரணமாக லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது அவேஷ் கானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தற்போதைய உணர்வுகளைப் பற்றி விவரிப்பது கடினமாக இருக்கிறது. எது தவறாக சென்றது என்று தெரியவில்லை. 19வது ஓவர் வரை போட்டியில் நாங்கள் இருந்தோம். அனேகமாக 19வது ஓவரில் நாங்கள் போட்டியை பினிஷிங் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என்னை நானே குற்றம் சொல்லிக் கொள்கிறேன்.
எங்கள் வீரர்கள் அனைவரும் சேர்ந்து 40 ஓவர்களும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். பவுலிங் துறையில் உண்மையாகவே நாங்கள் நன்றாக செயல்பட்டோம். கடைசி ஓவர் துரதிஷ்டவசமாக மாறியது. அதை சிறப்பாக வீசியிருந்தால் எதிரணியை நாங்கள் 165 - 170 ரன்களில் நிறுத்தி இருப்போம். சந்தீப் சர்மா நம்பிக்கைக்கு உரியவர். இது அவருக்கு ஒரு மோசமான போட்டியாக அமைந்தது.
அப்துல் சமத் கடைசி ஓவரில் நன்றாக பேட்டிங் செய்தார். நாங்கள் இந்த இலக்கை சேசிங் செய்திருக்க வேண்டும். இன்றைய பிட்ச் நன்றாக இருந்ததால் அதைப் பற்றி புகார் செய்ய எதுவும் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி சரியான பாதையில் இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.