
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அனுஷ் கடு. இவர் நேற்று நாக்பூரின் கலிப் நகரில் உள்ள பரபரப்பான சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அனுஷ் கடுவின் பைக்கை கும்பல் மறித்தது. பின்னர், தாங்கள் மறைத்து கொண்டுவந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு கொடூர ஆயுதங்களை கொண்டு அனுசை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.
இந்த சம்பவத்தில் நடுரோட்டிலேயே அனுஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட அனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழில் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி அனுஷ் கொல்லப்பட்டாரா? உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.