சென்னை: பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு பல்வேறு அணிகள் உருவாகின. முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் விலகிய நிலையில், சசிகலா சிறைக்கு சென்றபிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு, ஓபிஎஸ், இபிஎஸ் என மீண்டும் கோஷ்டிபூசல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, எடப்பாடி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கேற்ப கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இதை ஏற்க மறுத்து, ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது. உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் எதிர்தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், பெங்களூர் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், கட்சி விதிகளில் திருத்தம், புதிய தலைமை தேர்வு உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்று வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சியின் பெயர் கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதனால் இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம். மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் திருப்தியடைந்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும். எனவே, தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
* தேர்தல் ஆணையம் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.
* தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்.
The post அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.