அதிமுக ஒருங்கிணைய சிறப்பு பிரார்த்தனை ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி ஏற்றியதால் குழப்பம் குடியாத்தம் அருகே மீனூர் மலையில்

1 month ago 5

குடியாத்தம், அக்.18: குடியாத்தம் அருேக அதிமுக ஒருங்கிணைய மீனூர் மலையில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும், ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியேற்றியதால் கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் இருவரும் தனித்தனியாக அதிமுக பொதுச் செயலாளர் எனக்கூறி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்நிலையில் அதிமுக ஆரம்பித்து 52 ஆண்டுகள் நிறைவு பெற்று 53வது ஆண்டு துவக்க விழா வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் (ஓபிஎஸ் அணி) வழக்கறிஞர் கோதண்டம், அவரது காரில் அதிமுக கொடியுடன் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அதிமுக கொடியை ஏற்றி அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் 2வது திருப்பதி என்று கூறப்படும் மீனூர் மலை வெங்கடேச பெருமாள் கோயிலில் சென்று ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், தீபா ஆகியோர் ஒன்றாய் இணைய வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வெங்கடேச பெருமாளாவது இவர்களை ஒன்று சேர்த்து வைப்பாரா என்ற எண்ணத்தில் வேண்டிக்கொண்டதாக தெரிவித்தனர். ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கிய சம்பவம் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக ஒருங்கிணைய சிறப்பு பிரார்த்தனை ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி ஏற்றியதால் குழப்பம் குடியாத்தம் அருகே மீனூர் மலையில் appeared first on Dinakaran.

Read Entire Article