
ஷாஜகான்பூர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா விரைவு சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவு சாலையில், ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.
ஏதேனும் ஒரு அவசர காலங்களில் உடனடியாக அந்த விமானங்களை தயார்நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை மட்டுமல்லாமல் விமானங்கள் அவசர காலங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றனவா என்பதை கண்டறிய கூடிய விதமாக விமான ஒத்திகை நடைபெற்றது.
இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.