சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைக்கின்ற மேடையில் அதிமுகவினர் போய் அமர்கிறார்கள் என்றால், அந்த இயக்கத்தை அடிமை சாசனத்திற்கு எழுதி விட்டார்கள் என்றுதான் அர்த்தம். திராவிடத்தையே அழிப்போம் என்று சொன்ன எச்.ராஜாவும், திராவிடம் இனி தமிழகத்திலே கோலோச்ச முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன அண்ணாமலையும் அந்த மேடையிலேதான் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நேற்றைய மாநாடு அரசியல் மாநாடுதான் என்பது பக்தர்களின் பார்வையாகும். எங்களை பொறுத்த அளவில் அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்பதுதான். அரசியலில் ஆன்மிகத்தையும் கலந்து அரசியல் செய்யாதீர்கள் என்பதுதான் எங்கள் முதல்வரின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் நாங்கள் உறுதியாக இருப்போம்.
நேற்று நடந்த மாநாடு கூடி கலைந்த மேக கூட்டம். கொள்கை கூட்டம் என்பது வேறு, கூடுகின்ற கூட்டம் என்பது வேறு, கூட்டுகின்ற கூட்டம் என்பது அது கூட்டிய கூட்டம். ஒரு நாள் கூத்து, நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட நோக்கமே வெள்ளையர்கள் நம்மை ஆண்டபோது ஆங்காங்கே இருக்கின்ற கோயில் பரம்பரை தக்கார்களாக இருந்தவர்கள் கோயிலை ஒரு கம்பெனி போல் நடத்தி வந்தார்கள்அப்படி ஒரு நிறுவனமாக நடத்திக் கொண்டு அதில் வரும் வருமானங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டங்களை வெளியேற்றுவதற்காக தான் இந்து சமய அறநிலையத்துறை தோற்றுவிக்கப்பட்டது.
மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த நினைக்கின்ற பாஜவின் சங்கிகள் வேண்டுமா என்பதை 2026ம் ஆண்டு நிச்சயம் தமிழக மக்கள் முடிவு எடுப்பார்கள். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு செல்வாக்கா அல்லது இப்போது மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு செல்வாக்கா இதுதான் இப்பொழுது அங்கு நடந்து கொண்டிருக்கின்ற போட்டி. ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கின்றார், பச்சை துண்டுக்கு சொந்தக்காரர் நயினார் நாகேந்திரன். இன்னொருவர் காவித் துண்டை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கின்றார், அந்த காவி துண்டிற்கு சொந்தக்காரர் அண்ணாமலை. இந்த போட்டிக்காக நடத்தப்பட்ட ஒரு மாநாடு தான். இந்த போட்டியின் முடிவு தெரிந்த பின் களத்தில் சந்திப்போம். ஒட்டுமொத்தமாக ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜவுக்கு பூஜ்ஜியத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணாமலை, நயினார் போட்டியால் நடந்த முருகன் மாநாடு; பாஜவிடம் அதிமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள்: அமைச்சர் சேகர்பாபு விளாசல் appeared first on Dinakaran.