செம்பனார்கோயில்: தவாக நிர்வாகி கொலையில் எஸ்ஐக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). தவாக காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 2021ல் காரைக்கால் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தவாக கூட்டத்தில் மணிமாறன் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது, மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் என்ற இடத்தில் 2 கார்களில் பின் தொடர்ந்தவர்கள், திடீரென மணிமாறனை காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே படுகொலை செய்யப்பட்ட மணிமாறனின் சகோதரர் காளிதாசன் கொடுத்த புகாரில், ‘மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ, பாமக முன்னாள் செயலாளர் தேவமணியின் உறவினர் ஆவார். அவருக்கு மணிமாறன் படுகொலையில் தொடர்பு இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மணிமாறனை கொலை செய்தவர்களை பிடிப்பதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம். கொலையாளிகள் 4 பேர் என தெரியவந்துள்ளது. அவர்கள் காரைக்கால் வழியாக புதுச்சேரி சென்று இருக்கலாம். அங்கு ஒரு டிஎஸ்பி தலைமையில் போலீசார் விரைந்துள்ளனர். பழிக்கு பழியாகத்தான் இந்த கொலை நடந்திருக்கும். மேலும் தேவமணியின் உறவினரான வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ மீது டிஎஸ்பி ஒருவர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரை கண்காணிக்கும் பணியில் போலீசார் உள்ளனர் என்றார்.
The post தவாக நிர்வாகி கொலையில் எஸ்ஐக்கு தொடர்பா?தனிப்படை போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.