அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு இறுதி அறிக்கை, இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 1

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எவ்வளவு இழப்பீடு, இறுதி அறிக்கை எப்போது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வாலிபருக்கு எதிராக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது,’ தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது. இதுதொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை வாரம்தோறும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை தப்பிக்க வைக்கும் நோக்கில் நடந்து இருப்பது தெரியவருகிறது என்றனர். அதற்கு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், வழக்கில் தொடர்புடைய உண்மையான நபரை, நிரபராதி என்று காட்டவே, விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளார். வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டை திசை திருப்பும் நடவடிக்கையாக ஆடியோ, வீடியோவை விசாரணை அதிகாரி கசியவிட்டுள்ளார் என்பது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. உண்மையான நபரை தப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் உள்ளிட்ட பலருக்கு இந்த ஆடியோ, வீடியோ கசிந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. ஆடியோ கசிந்த விவகாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசின் கருத்தை பெற்று தெரிவிக்கவும் அவகாசம் வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், விசாரணை அதிகாரி, எவ்வாறு போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட நபரின் ஆடியோவை வெளியிட முடியும்?. பாலியல் வழக்கின் விசாரணை அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோவை, வழக்கு விசாரணையில் தொடர்பில்லாத நபர்களுக்கு கசிய விட்டது என்பது மிகவும் மோசமான நிகழ்வாகும். இந்தச் செயல் என்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். பாதிக்கப்பட்ட நபரின் ஆடியோவைப் பெற்ற நபர்களும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி, அதை பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இறுதி அறிக்கை தாக்கல், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு எவ்வளவு என்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு இறுதி அறிக்கை, இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article