சென்னை: தனது இனிப்பு கடை விளம்பரத்திற்காக அண்ணாசாலை மற்றும் ஜிபி சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர், ஸ்பைடர்மேன் உடை அணிந்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து சாகசத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னை அண்ணாசாலை மற்றும் ஜி.பி.சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வாலிபர் ஒருவர் கட்டிடத்தின் மேலே ‘ஸ்பைடர்மேன்’ உடையை அணிந்து திரைப்படங்களில் வருவது போல் சாகசத்தில் ஈடுபட்டார்.
வழக்கமாக இரவு நேரங்களில் அண்ணாசாலையில் உள்ள உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் அண்ணாசாலையில் அந்த வாலிபரை பார்க்க கூட்டம் கூடியது. அந்த நேரத்தில் திருவல்லிக்கேணி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணாசாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதை கண்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போதுதான் போலீசாருக்கு திரைப்படத்தில் வருவது போல் வாலிபர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து இரண்டு கைகளை நீட்டியபடி சாகசம் செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அண்ணாசாலையில் உள்ள பிரபல உணவகத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் அக்பர் அலி (28) என்றும், இவர் தனது இனிப்பு கடை சரியாக வியாபாரம் இல்லாததால், தனது கடையின் வியாபாரத்தை பெருக்கும் வகையில் விளம்பரம் செய்யும் நோக்கில், ஸ்பைடர்மேன் உடையை அணிந்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து பிரசாரம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அக்பர் அலியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post அண்ணாசாலையில் நள்ளிரவில் கட்டிடத்தின் உச்சியில் நின்று ஸ்பைடர்மேன் உடை அணிந்து வாலிபர் சாகசம்: போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர் appeared first on Dinakaran.