முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: பேட்டிங்கில் வெறித்தனம்; பவுலிங்கில் அமர்க்களம்; இந்தியா சாம்பியன்: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி

1 day ago 4

கொழும்பு: இலங்கையில் நடந்து வந்த முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நேற்று, இலங்கை அணியை 97 ரன் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வென்று கோப்பையை கைப்பற்றினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

போட்டிகளின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், இலங்கையும் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன் குவித்தபோது, ராவல் அவுட்டானார். பின் வந்த வீராங்கனைகளில், ஹர்லின் தியோல் 47, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 41, ஜெமிமா ரோட்ரிகஸ் 44 ரன் குவித்து அவுட்டாகினர். துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி, 101 பந்துகளில், 2 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 116 ரன் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது.

அதையடுத்து, 343 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஹாசினி பெரேரா ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் வந்தோரில் கேப்டன் சமாரி அத்தப்பட்டு (51 ரன்), நிலக்சிகா சில்வா (48 ரன்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.2 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 245 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 97 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும், கோப்பையையும் கைப்பற்றியது. இந்தியா தரப்பில், ஸ்நேஹ் ரானா 4, அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினர். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி.

சிங்கப் பெண் ஸ்மிருதி மந்தனா
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 101 பந்துகளில் 116 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். மந்தனா நேற்று விளாசிய 11வது சதத்தால், அதிக சதமடித்த வீராங்கனைகள் பட்டியலில், இங்கிலாந்தின் டேமி பியுமோன்டை (10 சதம்) பின்னுக்கு தள்ளி, 3வது இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில், மெக் லேனிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், சுஸி பேட்ஸ் 13 சதங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் மந்தனா விளாசிய 2 சிக்சர்களுடன் சேர்த்து, அவர் அடித்த மொத்த சிக்சர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஹர்மன்பிரித் கவுரை (53 சிக்ஸர்) பின்னுக்கு தள்ளி, இந்திய வீராங்கனைகளில் முதலிடத்தை மந்தனா பிடித்துள்ளார். மேலும் துவக்க வீராங்கனையாக மந்தனா விளாசிய ரன் எண்ணிக்கை 4,448 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், டாப் 5 துவக்க வீராங்கனைகளின் பட்டியலில், மந்தனா 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில், சுஸி பேட்ஸ், 5059 ரன்களுடன் முதலிடத்திலும், பெலிண்டா கிளார்க், 4828 ரன்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். தவிர, இலங்கைக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் 614 ரன்கள் குவித்துள்ள மந்தனா, இப்பட்டியலில், இந்திய வீராங்கனைகளில் மித்தாலி ராஜுக்கு (1103 ரன்கள்) அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிராக 2வது அதிக ரன் (116) குவித்த இந்திய வீராங்கனையாக மந்தனா உருவெடுத்துள்ளார். மித்தாலி ராஜ், 125 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார்.

The post முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: பேட்டிங்கில் வெறித்தனம்; பவுலிங்கில் அமர்க்களம்; இந்தியா சாம்பியன்: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article