சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சதீஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர், பின்னர் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.