சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது.
இந்த பேரணியில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.வின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
முன்னதாக இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், "காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி, முதல்-அமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் இன்று (3-ம் தேதி, திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். தி.மு.க. இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.