அண்ணாநகர், மார்ச் 29: அண்ணா நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா நகர், கோயம்பேடு, திருமங்கலம், வில்லிவாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் நள்ளிரவில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்க பல்வேறு சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அண்ணாநகர் 2வது அவென்யூ மற்றும் 3வது அவென்யூ ஆகிய சாலைகளில் 9 பேர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓடினர். இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து துணை ஆணையர் விஸ்வேஸ் உத்தரவின்படி அண்ணாநகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இரும்பு தடுப்புகளை அமைத்து பைக் ரேசில் ஈடுபட்ட 9 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களது பைக்குகளை பறிமுதல் செய்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 9 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post அண்ணா நகரில் பைக் ரேசில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.