சிட்னி: அதிபர் டிரம்ப் நிர்வாகம் யுஎஸ்எய்டு அமைப்பை மூடியதன் மூலம், அமெரிக்காவின் எந்த உதவியும் கிடைக்காததும், ராணுவ ஆட்சி, உள்நாட்டு போராலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் தேவையற்ற மரணங்கள் அதிகரிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் கடந்த 28ம் தேதி 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மியான்மரிலும், அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மியான்மரில் 1,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ராணுவ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை 10 ஆயிரமாக இருக்கக் கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகளும், புதிதாக கட்டப்பட்ட வானுயர கட்டிடம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
ஆனால், மியான்மரில் ராணுவ ஆட்சி நடப்பதால் எத்தனை பேர் இறந்தார்கள், என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்பது வெளி உலகுக்கு முழுமையாக தெரியாமலேயே உள்ளது. அந்நாட்டு ராணுவம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், சிக்னல், வாட்ஸ்அப், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆப்களுக்கு தடை விதித்துள்ளதால் உண்மையான பாதிப்புகளை யாரும் அறிய முடியவில்லை.
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த மியான்மரில் பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நடந்துள்ளது. கடந்த 2010ல் பொதுத் தேர்தல் மூலம் மக்களாட்சி மலர்ந்தது. அதன் பின் 10 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல், சமூக சீர்த்திருத்தங்கள் மூலம் மியான்மர் வளர்ச்சியை நோக்கி முன்னேறியது. அந்நிய முதலீடுகள் வரத் தொடங்கின. மக்களின் வாழ்கை மேம்பட்டது. ஆனால், 2021 பிப்ரவரியில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதிலிருந்து அந்நாடு மீண்டும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது.
தற்போது நாட்டின் வெறும் 21 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள பகுதிகளை போராளிகள் குழுக்கள் கைப்பற்றி உள்ளன. போராளிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான சண்டை நிலநடுக்கத்திற்கு பிறகும் ஓயவில்லை. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும், மீட்பு, நிவாரணப் படைகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் செல்ல முடியாது. எனவே அதிகம் பாதித்த மாண்டலே நகரத்தை தாண்டி பிற பகுதிகளின் பாதிப்புகள் என்னவென அறிய முடியவில்லை. இது தவிர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்பு மியான்மரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகம். எனவே அடுத்த ஒரு மாதத்தில் நோய் தொற்றை தடுக்கவும், நிவாரணம், இடிந்து போன குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், அணைகளை மறுகட்டமைக்க அதிகளவு நிதி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சர்வதேச நாடுகளுக்கு உதவும் யுஎஸ்எய்டு அமைப்புக்கு முடிவு கட்டி உள்ளார். சரியாக நிலநடுக்கம் நடந்த அன்று தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உலகளாவிய யுஎஸ்எய்டு பணியாளர்களை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
மியான்மரில் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழும். கடந்த 2008ல் ராணுவ ஆட்சியின் போது ஏற்பட்ட நர்கீஸ் புயலால் 1.40 லட்சம் மக்கள் இறந்தனர். அப்போது சர்வதேச உதவிகளுக்கு மியான்மர் ராணுவம் அனுமதி மறுத்தது. அந்த தவறால் மீட்பு பணிகள் நடக்காமல் அநியாயமாக மக்கள் பலர் பலியாகினர். இந்த முறை ராணுவம் அந்த தவறை செய்யவில்லை. உடனடியாக சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அமெரிக்காவின் உதவி கிடைக்காதது இம்முறை தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு யுஎஸ்எய்டு அமைப்பு மட்டுமே ரூ.2,000 கோடியை மியான்மரின் மனிதாபிமான உதவிகளுக்காக செலவிட்டுள்ளது. இது சர்வதேச உதவிகளில் 3ல் ஒரு பங்கு. எனவே யுஎஸ்எய்டின் உதவி இல்லாமல் மியான்மரால் இதுபோன்ற பேரழிவில் இருந்து மீள முடியாது. ராணுவ ஆட்சியும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனிதாபிமானமில்லாத முடிவுகளும் தொடரும் வரையிலும் மியான்மரில் நிவாரணமின்றி மக்கள் மடிவது தொடர்கதையாக இருக்கும் என சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வழிபாடு நடத்திய 700 பேர் புதைந்தனர்
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள பெரும்பாலான மசூதிகள் இடிந்து சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ரமலான் மாதம் என்பதால் பல மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்த சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தொழுகை நடத்திய 700 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என இஸ்லாமிய அமைப்பின் துன் கி தெரிவித்துள்ளார். சுமார் 60 மசூதிகள் சேதம் அல்லது இடிந்திருப்பதாக அவர் கூறி உள்ளார். இதே போல, மாண்டலே நகரில் புத்த துறவிகளுக்கான தேர்வு எழுதிக் கொண்டிருந்த 270 புத்த துறவிகள் இடிபாடுகளில் புதைந்தனர். அவர்களில் 70 பேர் மீட்கப்பட்ட நிலையில், 50 பேரின் சடலம் கிடைத்துள்ளது. மேலும், 150 பேரை தேடி வருகின்றனர். மாண்டலேவின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இப்பிராந்தியத்தில் 3 மருத்துவமனைகள் இடிந்து தரைமட்டமானதாகவும் 22 மருத்துவமனைகள் சேதமடைந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 சீனர்கள் கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும், அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. பாங்காக்கில் பல வானுயர அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கினாலும், புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிய 18 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி இரவுபகலாக நடக்கிறது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணியை மேற்கொண்டது சீன நிறுவனம். அந்நிறுவனத்தின் 4 அதிகாரிகளை பாங்காக் போலீசார் கைது செய்துள்ளனர். கட்டிடம் இடிந்ததை தொடர்ந்து சில ஆவணங்களை அவர்கள் மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற கட்டிடங்கள் பாதிக்காத நிலையில் இந்த கட்டிடம் மட்டும் இடிந்ததற்காக காரணத்தை விசாரிக்க தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பலி 2,000 ஆக அதிகரிப்பு
மியான்மரில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை 1,644 பேர் இறந்திருப்பதாக தெரிவித்த மியான்மர் ராணுவ அரசு நேற்று 2,056 பேர் இறந்திருப்பதை உறுதி செய்துள்ளது. 3,900 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 270 பேரை காணவில்லை என்றும் கூறி உள்ளது.
7 சடலங்களை மீட்ட இந்திய மீட்பு படை
மியான்மருக்கு உதவ ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் இந்தியா மீட்பு உபகரணங்களையும், நிவாரண உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாண்டலே நகரின் செக்டார் டி பகுதியில் 13 கட்டிடங்களில் மீட்பு பணியில் ஈடுபட மின்யான்மர் அரசு கேட்டுக் கொண்டது. கடந்த சனிக்கிழமையிலிருந்து நேற்று வரை 7 சடலங்களை தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். யு ஹிலா தியின் மடாலயத்தில் இடிபாடுகளில் புதைந்த புத்த துறவிகளை மீட்கும் பணியிலும் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. அங்கு 3 துறவிகளின் சடலங்களை இந்திய மீட்பு படை மீட்டுள்ளது.
The post அமெரிக்கா உதவியை நிறுத்தியதால் மியான்மரில் மேலும் பலி அதிகரிக்கும் அபாயம்: அதிபர் டிரம்ப் எடுத்த முடிவால் வேதனை appeared first on Dinakaran.