அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமாக்கல் மூலம் படுகொலை செய்யப்படும் இந்திய கல்வி முறை: மோடி அரசு மீது சோனியா காந்தி தாக்கு

1 day ago 4

புதுடெல்லி: அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கல் ஆகிய 3 கொள்கைகள் மூலம் மோடி அரசு இந்தியாவின் பொதுக் கல்வி முறையை படுகொலை செய்வது முடிவுக்கு வர வேண்டுமென காங்கிரசின் சோனியா காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சோனியா காந்தி, நாட்டின் கல்வி முறை குறித்து ஆங்கில பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
இன்று இந்திய கல்வி முறையை 3 சிக்கள் வேட்டையாடுகின்றன. அவை, அதிகார குவிப்பு (centralization of power), வணிகமயமாக்கல் (commercialization) மற்றும் மதவாதமயமாக்கல் (communalization). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியிருக்கிறது. கவர்ச்சிகரமான தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகப்படுத்தி, நாட்டின் குழந்தைகள், இளைஞர்களின் கல்வியில் ஆழமான அலட்சியம் காட்டு அரசின் யதார்த்தம் மறைக்கப்பட்டு விட்டது.

கட்டுப்பாடற்ற அதிகார குவிப்பு, கடந்த 11 ஆண்டுகளாக பாஜ அரசின் செயல்பாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இது கல்வித்துறையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில கல்வி அமைச்சர்களைக் கொண்ட ஒன்றிய கல்வி ஆலோசனை வாரியம் (சிஏபிஇ) கடந்த 2019 செப்டம்பரில் இருந்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் முன்னுதாரணமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை செயல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பது சரியானது என்பதை ஒன்றிய அரசு ஒருமுறை கூட கருதவில்லை. பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் கூட, தனது சொந்தக் குரலைத் தவிர வேறு எந்தக் குரலுக்கும் செவிசாய்க்காத பாஜ அரசின் தனித்துவமான உறுதிக்கு இது ஒரு சான்று.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மோடி அரசு கல்வியை வணிகமயமாக்குவது வெளிப்படையாக நடந்து வருகிறது. நாட்டின் ஏழைகள் பொதுக் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு, மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பள்ளி முறையின் கைகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் முந்தைய தொகுதி மானிய முறைக்கு மாற்றாக உயர் கல்வி நிதி நிறுவனத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

மூன்றாவதாக, பள்ளிப் பாடத்திட்டத்தின் முதுகெலும்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்கள் மற்றும் இந்திய வரலாறுகள் மதவாத நோக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் படுகொலை, முகலாய இந்தியா பற்றிய பிரிவுகள் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய அரசியலமைப்பின் முகவுரை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டு, கடும் எதிர்ப்பால் அது சேர்க்கப்பட்டுள்ளது.

கற்பித்தலின் தரம் மோசமாக இருந்தாலும், ஆட்சியாளர்களுக்கு உகந்த சித்தாந்த பின்னணியை கொண்ட பேராசிரியர்கள் அதிகளவில் பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படுவதை கண்டிக்கிறோம். வளைந்து கொடுக்கும் சித்தாந்தவாதிகளுக்கு முக்கிய கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் கல்வி முறைகள் பொது சேவையின் உணர்விலிருந்து முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கலுக்கான அழுத்தம் நமது மாணவர்கள் மீது நேரடியாக விழுந்துள்ளது. இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் மீதான இந்தப் படுகொலை முடிவுக்கு வரப்பட வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

மாநிலங்களுக்கு மானியத்தை நிறுத்துவது அவமானகரமானது
சோனியா காந்தி தனது கட்டுரையில், ‘இந்த அரசாங்கத்தால் செய்யப்படும் மிகவும் அவமானகரமான செயல்களில் ஒன்று, சமக்ர சிக்சா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய மானியங்களை நிறுத்தி வைப்பது. இதன் மூலம், மாதிரிப் பள்ளிகளின் பிஎம்  திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் வற்புறுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரம்
‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளை முழுமையாக விலக்கி விட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு வழிகாட்டுதல்கள் கொடூரமானவை. இதில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, ஒன்றிய அரசின் தனிப் பொறுப்பாக மாற்றுவதற்கான பின்வாசல் முயற்சி.’ என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

The post அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமாக்கல் மூலம் படுகொலை செய்யப்படும் இந்திய கல்வி முறை: மோடி அரசு மீது சோனியா காந்தி தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article