சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72வது பிறந்த நாளையொட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் தொண்டர்கள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு காலை 8 மணிக்கு வந்தார். அங்கு அவர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார்.
இதைத்தொடர்ந்து, கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சிவசங்கரன், மூர்த்தி, ேகாவி. செழியன், மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள்,
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் க.சுந்தர், இ.பரந்தாமன், தாயகம் கவி, மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர், காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்தி திணைப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று, கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.
மேலும் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி எம்பி உடன் இருந்தார். பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டினார். பின்னர் சென்னை அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு கேக் ஊட்டினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, அனைவருக்கும் வணக்கம். என்னுடைய 72வது பிறந்தநாள் விழா மட்டுமல்ல, நம்மை எதிர்நோக்கியிருக்கின்ற காலக்கட்டத்தில், பிறந்தநாளை கொண்டாடப்படும் இந்த தருணத்தில் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து இருக்கிறேன். ‘ஒரே இலக்கு. தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுப்பட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாடு ேபாராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று கூறினார். அனைவரும் இந்த உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
பின்னர் அங்கு அவர் தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற தொடங்கினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொண்டர்கள் அனைவரிடம் இருந்தும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக புத்தகம் மற்றும் சால்வை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், எம்பி சுதா, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ரூபி மனோகரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் சால்வை அணிவித்து வாழ்த்து ெதரிவித்தார். அப்போது எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் , எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து ெதரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன், எம்எல்ஏக்கள் காரப்பாக்கம் கணபதி, பல்லாவரம் கருணாநிதி, வி.ஜி.ராஜேந்திரன், பனையூர் பாபு, ஜி.செல்வம் எம்பி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மாநில சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.எம்.ஜாவீத், தென்மேற்கு மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தி.நகர் லயன் சக்திவேல், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கி.வீ.ஆனந்தகுமார், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, சென்னை கிழக்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் துரைகண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே.சித்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர். அமைச்சர் முத்துசாமி மலைவாழ் மாணவர்களை முதல் முறையாக விமானம் மூலம் அழைத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு திமுக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். ஏழை-எளியவர்களுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி வந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள் வாழ்த்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்டுங்கடங்காத கூட்டம் வந்திருந்தது. அவர்கள் அனைவரிடமும் முதல்வர் வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. மாற்றுத்திறனாளிகள் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
4 மணி நேரம் ெதாண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்ற முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.10 மணிக்கு போல வாழ்த்துக்களை பெற தொடங்கினார். அவருக்கு கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வருக்கு சால்வை, புத்தகம், பூங்கொத்து, பழங்கள், சிற்பங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த திமுக தொண்டர்கள் 250 கிலோ எடை கொண்ட பித்தளையில் சிங்கம் சிலையை முதல்வருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினர். கட்டுங்கடங்காத கூட்டத்திலும் அனைவரையும் சந்தித்து சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அவர் தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார்.
என்னுடைய கவலை எல்லாம்…
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இருக்கக்கூடிய தலைவர்கள் முன்னிலையில் தெளிவாக நான் பேசியிருக்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். இன்றைக்கு திணிக்கப்பட கூடிய இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இரு மொழி கொள்கையை கொண்டுவர வேண்டும். அதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி. நேற்று கட்சி தொடங்கியவர்கள் திமுகவை பற்றி விமர்சிப்பது குறித்து எனக்கு கவலையில்லை. என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் தான். மாநில உரிமையை நாம் பெற வேண்டும் என்பதை பற்றி தான் என்னுடைய கவலை உள்ளது” என்றார்.
The post அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் மரியாதை தமிழ்நாட்டின் நலனை விட்டுத்தர மாட்டோம்: 72வது பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி appeared first on Dinakaran.