வாகா: அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடப்பட்ட நிலையில், 80 பாகிஸ்தானியர் எல்லையில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22ம் தேதி பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் முறைப்படி விசா மூலமாகவும், சட்டவிரோதமாகவும் தங்கியிருந்த 911 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறப்பட்டனர். நேற்றுடன் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றும் காலக்கெடு முடிந்ததால், அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடப்பட்டது.
நேற்று பாகிஸ்தான் குடிமக்கள் சிலர் அட்டாரி – வாகா எல்லை வழியாக தங்களது நாட்டிற்கு செல்ல முயன்றனர். ஆனால் எல்லை கதவுகளை பாகிஸ்தான் மூடியதால், அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா தனது எல்லைகளை மூட முடிவு செய்திருந்தாலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவை மாற்றியமைத்தது.
அதன்படி பாகிஸ்தான் நாட்டினர் அவர்களின் நாட்டிற்கு செல்ல வசதியாக மறு உத்தரவு வரும் வரை இந்தியா தனது எல்லையைத் திறந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இன்றைய நிலையில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியர்களில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். அதேபோல் பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்த இரண்டு இந்தியர்களும், அங்கிருந்து இந்திய எல்லைக்கு வரமுடியாமல் அங்கேயே மயங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post அட்டாரி-வாகா எல்லை முழுவதும் மூடல்: 80 பாகிஸ்தானியர் எல்லையில் தவிப்பு appeared first on Dinakaran.