சென்னை,
அள்ள.. அள்ள.. குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நாளையொட்டி, இன்று தமிழகத்தில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் பெரும்பாலானவை இன்று காலை 5 மணிக்கே விற்பனையை தொடங்கிவிட்டன.
அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கினால் வாழ்வு செழிக்கும் என்று நம்பிக்கை கொண்ட பலர், தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினர்.
அதனால், சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அட்சய திருதியை நாள் என்றாலும் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும், ஒரு கிராம் 8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10-ந் தேதி வந்தது. அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.6,705-க்கும், ஒரு பவுன் ரூ.53,640-க்கும் விற்பனையானது. அன்று மட்டும் தமிழகத்தில் 20 ஆயிரம் கிலோ என்ற அளவுக்கு ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஆனது. அது முந்தைய (2023) ஆண்டைவிட 20 சதவீதம் விற்பனை அதிகம் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக உயர்ந்தபோதும், விற்பனை அமோகமாகவே நடந்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனால், இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை, கடந்த ஆண்டைவிட சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.