
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய முப்பரிமாண வரைபடம்(3D Mapping) மூலம் துப்பறியும் பணியை தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) தொடங்கியுள்ளது.
உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம், சம்பவ இடத்தின் 3D வரைபடத்தை உருவாக்கும் பணியில் என்.ஐ.ஏ. ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகள் எந்த பகுதி வழியாக நுழைந்தனர்? எந்த பக்கமாக வெளியேறினர்? உள்ளிட்ட தகவல்களை கண்டறிய முடியும் எனவும், பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டறிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.