பாங்காங்: மியான்மர், தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 153 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசியா பகுதியில் அடுத்தடுத்து நேற்று 6 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு மியான்மர், தாய்லாந்தில் அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள், ஓட்டல்களில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாங்காங்கின் பிரபலமான சதுசாக் சந்தை அருகில் கட்டுமான பணியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 90 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. நைப்பியிதோவில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று ‘அவசர சிகிச்சை பிரிவு’ ஆக அறிவிக்கப்பட்டது. 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே காயம்பட்ட பலர் வரிசையாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாண்டலேயில் ஒரு மசூதியில் தொழுகை செய்த அத்தனை பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மேலும் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நிலநடுக்கத்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மியான்மரில் நேபிடேவ் மற்றும் மண்டலே உட்பட 6 பிராந்தியங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. மண்டலேயில் முன்னாள் அரச குடும்பத்தின் பங்களா சேதமடைந்தது. மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் இது வெகுவாக உணரப்பட்டது.
பாங்காக்கில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாங்காங்கில் சாதுசாக் பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இதேபோல் மேலும் சில கட்டிடங்களும் சரிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
தலைநகர் பாங்காக் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவின் யுனான் மற்றும் ஷிசுயான் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள ருயிலி பகுதியில் நிலநடுக்கத்தால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது, சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே போல் இந்தியா, வியட்நாம், வங்கதேச பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆனால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான மியான்மர், தாய்லாந்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு பலி எண்ணிக்கை தற்போது வரை மியான்மரில் 144 பேரும் தாய்லாந்தில் 9 பேரும் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
* மியான்மர் ஏர்போர்ட் சேதம்
மியான்மரில் ஐராவதி ஆற்றின் மீது ஒரு பழைய பாலம் மற்றும் பல குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழுந்தன, மாண்டலே நகரம் முழுவதும் நிலநடுக்கத்தின் பேரழிவில் சிக்கி உள்ளது. மாண்டலே ஏர்போர்ட் சேதம் அடைந்தது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய ஷான் மாநிலத்தின் டவுங்கி நகருக்கு அருகில் ஒரு புத்த மடாலயம் இடிந்து விழுந்தது. மாண்டலே மற்றும் யாங்கூன் இடையேயான சாலைகளும் சேதமடைந்துள்ளன.
* பிம்ஸ்டெக் மாநாடு நடக்குமா? மோடி பயணம் செய்வாரா?
பிம்ஸ்டெக் 6வது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, வரும் ஏப்.3 முதல் 4ம் தேதி வரை தாய்லாந்து செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் மோடி பயணம் செய்வது குறித்தும், பிம்ஸ்டெக் மாநாடு நடப்பதும் சந்தேகம் என்று தாய்லாந்து நாட்டினர் தெரிவித்தனர்.
* பதறி அடித்து ஓடிய மக்கள்
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காங்கில் மிகப்பெரிய கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. வடக்கு பாங்காக்கில் உள்ள 30 மாடி கொண்ட கட்டிடம் சரிந்ததால் தெரு முழுவதும் புகை மண்டலமானது. இதை பார்த்த மக்கள் அலறி அடித்து வீதிகளில் தப்பி ஓடினர்.
* தாய்லாந்து, சீனா, இந்தியா, வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
* சகாயிங் நகரின் வடமேற்கில் 10 முதல் 30 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
* மியான்மர் ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கும், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவும் அவசரநிலையை அறிவித்தனர்.
The post அடுத்தடுத்து 6 முறை பயங்கர நிலநடுக்கம் தாய்லாந்து, மியான்மரில் 153 பேர் பலி: சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள், ஆயிரக்கணக்கானோர் கதி என்ன? appeared first on Dinakaran.