அடுத்த ஐ.பி.எல் தொடரில் தோனி விளையாடுவாரா..? - சி.எஸ்.கே. வின் சி.இ.ஓ. கூறியது என்ன..?

3 months ago 20

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியம் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தோனி தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐ.பி.எல்.லில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. இதனால் வரும் சீசனில் தோனி சி.எஸ்.கே. அணிக்காக விளையாடுவாரா? அவரை சி.எஸ்.கே. அணி தக்க வைக்குமா? ஒருவேளை தோனி விளையாடவிட்டால் அவருக்கு சி.எஸ்.கே. அணியியில் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே. என்றாலே தோனி தான். இது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆடுவேனா, ஆடமாட்டேனா என்று இன்னும் அவர் எங்களுக்கு சொல்லவில்லை. அணியில் தக்க வைக்க வேண்டிய வீரர்களின் விபரத்தை அளிக்க அக்டோபர் 31ம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் எங்களிடம் சொல்வதாக கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு பிறகு அதுபற்றி உங்களிடம் நான் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரை தோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.

Read Entire Article