இஸ்லாமாபாத்: ‘அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் எங்கள் மீது போர் தொடுக்கலாம் என நம்பகமான உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன’ என பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் பதற்றத்துடன் கூறி உள்ளார். காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கான பதில் நடவடிக்கை குறித்து இந்தியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தீவிரவாதிகளுக்கும் அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக எந்தமாதிரியான நடவடிக்கை எடுப்பது என பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து உயர்மட்ட கூட்டங்கள், அமைச்சரவை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். இதனால் பாகிஸ்தான் மிரண்டுபோயுள்ள நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் அளித்த பேட்டியில், ‘‘பஹல்காம் தாக்குதலுடன் ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பஹல்காம் விவகாரத்திலும் நடுநிலையான, வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால் இந்த விசாரணையை தவிர்த்து இந்தியா மோதல் பாதையை தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவம் பதிலடி தருவோம். எங்களுக்கு கிடைத்த நம்பகமான உளவுத்தகவலின்படி, இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் எங்கள் மீது போர் தொடுக்கலாம்’’ என்றார்.
* 6வது நாளாக அத்துமீறல் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இரவு நேரத்தில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6வது நாளாக நேற்று முன்தினம் இரவும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. எல்லைக் கட்டுப்பாடு, சர்வதேச எல்லை என காஷ்மீரின் 4 மாவட்டங்களை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக பீரங்கி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மட்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது சர்வதேச எல்லையிலும் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்கிறது. போர் நிறுத்த மீறல்கள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் நேற்று ஹாட்லைனில் பேசினர்.அப்போது, எல்லையில் அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக எச்சரித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
* ஆக்கிரமிப்பு காஷ்மீர் விமானங்கள் ரத்து
இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித், ஸ்கர்து மற்றும் பிற வடக்கு பகுதிகளுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் நேற்று திடீரென விமான சேவையை ரத்து செய்தன.
The post அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா போர் தொடுக்கலாம்: பாகிஸ்தான் அமைச்சர் அலறல் appeared first on Dinakaran.