
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் உயிர்நாடியாக விளங்குவது கிராமப்புறங்கள்தான் என்பதும், கிராமங்கள் சிறந்து விளங்கினால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதும், பாரத நாடு வளர்ச்சியுறும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இதன் அடிப்படையில் ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை பெருக்கி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்கி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மாநில அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இந்த அடிப்படை வசதியைக்கூட மக்களுக்குச் செய்து கொடுக்க இயலாத திராணியற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்ற நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய கண்காணிப்பில் ஊராட்சிகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளான குடிநீர் விநியோகம், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், வரி வசூல் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற ஓர் அவல நிலை நீடிக்கிறது. ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது. இது தவிர, பல ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர் இடங்களும் காலியாக உள்ளன. இது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம். திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளுமே அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.
கிராமங்களின் வளர்ச்சியில்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊராட்சிகள் மேம்பட வேண்டுமென்பதை மனதில் நிலைநிறுத்தி, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.