அடிப்படை அறிவுக்கூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு: அமைச்சர் ரகுபதி

6 hours ago 4

சென்னை: “பொள்ளாச்சி தொடங்கி அண்ணா நகர் பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமி, பெண்களுக்குத் தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என விஷமப் பிரசாரத்தைச் செய்து மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா?” என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பானா ரேஞ்சில் கோழை பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜகவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக கூட்டணி கிடையாது என விதவிதமான மொழிகளில் நீங்கள் பேசிய வீடியோக்கள் இன்றைக்கும் ட்ரோல் ஆகிக் கொண்டிருக்கிறது. அது உங்கள் முகத்திரையைக் கிழிக்கும் கண்ணாடிதானே! அது உங்களைப் பார்த்துத்தானே சிரிக்கிறது.

தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லி செல்லாத நீங்கள், உங்கள் மகன் மிதுனுக்காகதானே அமித்ஷாவை போய் பார்த்தீர்கள். ரெய்டில் குடும்பம் சிக்கி விடக் கூடாது என்பதற்காகத்தானே பாஜகவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்குக் காரணம் உங்கள் குடும்பம் தானே? ’’பாஜகவோடு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை’’ என வீராவேசமாகப் பேசிய ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி, வெள்ளைக் கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திக் கொண்டு போனர். கார்கள் மாறி மாறி கள்ளத்தனமாக அமித்ஷாவை டெல்லியில் போய் பார்த்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாத பழனிசாமி, தன் குடும்பத்திற்குப் பாதிப்பு என்றதும் டெல்லிக்கு ஓடிச் சென்று அமித்ஷாவின் காலடியில் அதிமுகவை அடகு வைத்தார்.

கடந்த ஜனவரி 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொடர்பாக 26 இடங்களில் நடந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்று முதல் கைது காய்ச்சலில் பயந்து வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தவர்தான் பழனிசாமி.

அந்த வழக்கில் இருந்தும் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை சோதனைகளில் இருந்தும் தப்பிக்கவும் பாஜக கூட்டணிக்குத் தாவியவர்தான் பழனிசாமி. “படுத்தே விட்டாரய்யா…” என்ற சொற்களுக்கு உருவமே கூவத்தூர் எடப்பாடி பழனிசாமிதான். அந்த கூவத்தூரில் கற்ற கலையை அமித்ஷா வீட்டு வாசல் வரையில் போய் அரங்கேற்றினார். முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு. நாடகங்களை வைத்து அரசியல் செய்யலாம் எனும் பகல் கனவில் அடுக்கடுக்கானப் பொய்களை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு அனைத்திந்திய அளவிலேயே பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்பதை உலகறியும். ஊழலில் முதுகலைப் பட்டம் பெற்று, ஊதாரி ஆட்சி நடத்தி பாஜகவிடம் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்கு டெல்லி பயணம் என்றால் தவழ்ந்து செல்வது மட்டும்தானே தெரியும். ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கே சவால் விடும் வகையில் பாஜகவின் கால்களில் ஊர்ந்து சென்று அடிமை ஊழியம் செய்யும் பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து நிற்கும் முதலமைச்சரைப் பார்த்துப் பேச அருகதை இருக்கிறதா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்த பெண்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிப்பார்த்த பழக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் NIC நிறுவனமே அளித்த விளக்கங்களை மறைத்து பச்சைப் பொய்யைக் கூசாமல் அடித்து விடுகிறார் பழனிசாமி. அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் அதிமுகவின் வட்டச் செயலாளர் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் நினைத்துக் கொண்டாரா பழனிசாமி?

பொள்ளாச்சி தொடங்கி அண்ணாநகர் பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமி, பெண்களுக்குத் தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என விஷமப் பிரச்சாரத்தைச் செய்து மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா? தமிழ்நாட்டில் நீட்டை நுழைத்துப் பல மாணவர்களின் உயிர்கள் பறிபோகக் காரணமான பழனிசாமி, திமுக கொடுத்த அழுத்தத்தையும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் கொண்டு வந்ததுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு. அதற்காகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்த போது ஆளுநரை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது. அன்றைக்கு அதிமுக ஆளுநரை எதிர்க்கக் கூட துணிவில்லாமல் தூங்கி கொண்டிருந்தது. மருத்துவப்படிப்புக்கு மட்டும் இருந்த உள் ஒதுக்கீட்டைப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்படிப்புகளுக்கு நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பலனடையச் செய்து வருவது திராவிட மாடல் அரசு.

நீட்டை நுழைத்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையைக் காவு கொடுத்த அதிமுக-வினர் வெட்கித் தலைகுனியாமல் வீர வசனங்கள் பேசித் திரிவது வெட்கக்கேடு. நீட், உதய் மின் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல், மற்றும் தேசியக் குடியுரிமை சட்டம் (CAA) போன்றவற்றிற்கு ஆதரவு அளித்து துரோகம் என்றால் பழனிசாமி, பழனிசாமி என்றால் துரோகம் என துரோக ஆட்சி நடத்திய துரோகி பழனிசாமி மாநிலத்தின் உரிமைகளுக்காக நாளும் போராடிக்கொண்டிருக்கும் திமு கழகத்தைப் பார்த்து குற்றம் சொல்ல எந்த அருகதையும் இல்லை,

ஆளுநர்களுக்கு அடிபணிந்து அவர்களை நாட்டாமை செய்யவிட்ட அடிமை ஆட்சிதான் பழனிசாமியின் அவல ஆட்சி. ஆளுநர்களின் சண்டித்தனத்தை அடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைப் பெற்று இன்று இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் ஆட்சி! வரிப்பகிர்வு, வெள்ள நிவாரணம், கல்வி நிதி எனப் பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை முடக்கும் பாஜகவைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. வக்கில்லை. திராணி இல்லை இந்த வீர வசனங்கள் எல்லாம் நமக்குத் தேவைதானா பழனிசாமி?

தமிழ்நாட்டின் எந்த உரிமையைப் பெற பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்ல எதாவது பதில் வைத்திருக்கிறாரா பாதம்தாங்கி பழனிசாமி? தனது மகனுக்காகவும் சம்பந்திக்காகவும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவின் செய்தி தொடர்பாளராக பழனிசாமி மாறுவதற்குப் பதில் கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம். பழனிசாமியின் அபத்தங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் ஒருநாளும் வெற்றியடையாது. மக்களுக்கு உண்மைகள் தெரிந்ததால்தான் பத்து தோல்வி பழனிசாமி எனப் பட்டம் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

The post அடிப்படை அறிவுக்கூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article