அடிக்கடி ஏற்படும் நீர்க்கடுப்பால் அவதியா..? சிறந்த மருந்து இதுதான்..!

1 week ago 3

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க் கடுப்பு ஏற்பட்டு தொந்தரவு கொடுக்கும். அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் பிரச்சினை வரும். எரிச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் இந்தத் தொந்தரவு ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுவதுண்டு. இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவை:

பெண்களுக்கான பாதிப்பு

1) சிறுநீர்ப்பாதை தொற்று நோய்: ஆண்களைவிட பெண்களுக்கு பாக்டீரியாக் கிருமி சிறுநீர்ப்பாதைக்குள் மிகச் சுலபமாக நுழைந்துவிட முடியும். இந்தப் பிரச்சினையில் கெட்ட பாக்டீரியாக் கிருமிகள் சிறுநீர்ப்பையிலும், சிறுநீர்க்குழாயிலும் சிறுநீரகத்திலும் மிகச் சாதாரணமாக நுழைந்து வளர்ந்து பன்மடங்கு பெருகி நோயை உண்டாக்குகின்றன.

2) சிறுநீர்க்குழாய் சுருங்கி இறுகிவிடுதல்: இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் இருக்கும்.

3) சிறுநீர்க்குழாய் தொற்றுநோய்.

4) பெண்களின் பிறப்புறுப்பில் தொற்றுநோய்: இதனால் எரிச்சல், அரிப்பு வழக்கத்திற்கு மாறாக கெட்ட நாற்றத்துடன் நீர் கசிவது.

5) சிறுநீரகக் கற்கள்: சிறுநீரில் ரத்தம் சேர்ந்து வருவது இடுப்பின் இரண்டு பக்கமும் கடுமையான வலி.

6) பால்வினை நோய்,

7) கர்ப்ப காலத்தில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்,

8) நாம் சாப்பிடும் சில மருந்துகள் கூட சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை உண்டுபண்ணும்.

ஆண்களைப் பொறுத்தவரை நீர்க்கடுப்புக்கான காரணங்களாக, சிறுநீரகப் பாதை தொற்றுநோய், பிராஸ்டேட் சுரப்பி நோய், புற்று நோய் ஆகியவற்றில் ஏதாவது இருக்கலாம்.

தீர்வுகள்

பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீர்ப்பாதை (யூராலஜிஸ்ட்) சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வப்பொழுது பழச்சாறுகள் குடிக்க வேண்டும். எப்பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதே சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

'அணையாடை' என்று சொல்லக்கூடிய டயபர் ஜட்டி அணிபவராக இருந்தால் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். வாழைப்பழம், பேரிக்காய் போன்ற பழங்கள் நீர்க்கடுப்புக்கு நல்லது. சமையல் புளியும், கருப்பட்டியும் சம அளவில் சேர்த்து கரைத்த கரைசல் நீர் இம்மாதிரி நேரத்தில் குடிப்பது நல்லது. பிறப்புறுப்புகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதுதான் நீர்க்கடுப்புக்கு சிறந்த மருந்து. தண்ணீரானது பாக்டீரியாக் கிருமிகளை வெளியே அடித்துக் கொண்டு வந்துவிடும். அத்துடன் சிறுநீரையும் நீர்க்கச் செய்துவிடும்.

 

Read Entire Article