
கவுகாத்தி,
அசாமில் ஏ.ஜி.பி. எனப்படும் அசோம் கண பரிசத் கட்சியின் முதல் ஆட்சியின்போது, உள்துறை மந்திரியாக இருந்தவர் பிரிகு குமார் புகான். 2006-ம் ஆண்டு மரணமடைந்த இவருடைய மகள் உபாசா புகான் (வயது 28).
அசாமின் கவுகாத்தி நகரின் கார்குலி பகுதியில் வீட்டின் 2-வது மாடியில் தன்னுடைய தாயாருடன் உபாசா புகான் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2-வது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்து உள்ளார்.
அவரை உடனடியாக கவுகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை போலீசார் இன்று உறுதிப்படுத்தி உள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், உபாசா நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு முன்பும் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
ஆனால், நேற்று அவருடைய தாயார் வீட்டு வேலையில் பரபரப்பாக இருந்தபோது, உபாசா தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.