
தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது.
கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும். அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.
கத்திரி வெயிலின்போது வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். கோடை காலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது.
கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது.