அகில இந்திய ஹாக்கி காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி

2 months ago 10

சென்னை: சென்னையில் நேற்று நடந்த உத்தரப்பிரதேசத்துடனான ஹாக்கி காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியை தழுவியது. அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் 14வது தொடர் சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடக்கிறது. இங்கு, நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. அதில் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை உபி. வீரர் சந்தன் சிங் கோலாக மாற்றியதால், அந்த அணி முன்னிலை பெற்றது. அடுத்து 9வது நிமிடத்தில் பந்தை கடத்தி வந்த தமிழ்நாடு வீரர் எஸ்.சண்முகவேல் ஃபீல்டு கோல் அடித்து அசத்தினார். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.

இரண்டாவது பாதியில் வேகம் காட்டிய உபிக்கு ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை ராஜ்குமார் பால் கோலாக மாற்ற, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முட்டி மோதின. 34வது நிமிடத்தில் உபி. அணி கேப்டன் லலித்குமார் கோலடித்து அசத்தினார். அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் ஆட்ட முடிவில் உபி. 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதி வாய்ப்பை பெற்றது.

இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த அணியாக இருந்தும், உபியிடம் முதல் முறையாக தோற்ற தமிழ்நாடு போட்டியில் இருந்து வெளியேறியது. முன்னதாக நடந்த, பஞ்சாப்-மணிப்பூர் இடையிலான காலிறுதி ஆட்டம், 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதனால் நடந்த ஷூட் அவுட்டில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த மற்றொரு காலிறுதியில் அரியானா 3-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறும்.

The post அகில இந்திய ஹாக்கி காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article