அ.தி.மு.க. விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை - சி.வி.சண்முகம்

2 hours ago 1

சென்னை,

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்கிற எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.

ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தநிலையில், தற்போது அந்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு அதிகாரங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. அதற்கு அதிகாரமும் இல்லை

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 15இன் படி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம். 29 ஏ சட்டப்பிரிவின் படி கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. ஆனால், உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.

அ.தி.மு.க. வழக்கில் தேர்தல் ஆணையம் 2 தவறுகளை செய்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது தவறு. தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதற்கு எதிராகவே ஐகோர்ட்டை நாடினோம்.

மனு கொடுத்துள்ள நபர் அ.தி.மு.க.விலேயே இல்லை. இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா? என்று முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து விளக்கம் கேட்க ஆணையம் முடிவு செய்தது

திருத்தங்களை மாற்றங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.. ஆட்சேபனை இருப்பின் அதை விசாரிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு மட்டுமே உள்ளது.

சூரியமூர்த்தி என்பவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டவர், கட்சி உறுப்பினரும் அல்ல. கட்சியில் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர். மனுதாரர்கள் அ.தி.மு.க.வினரே அல்ல. நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article