பணய கைதிகளை சனிக்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லையென்றால்... - ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்

3 hours ago 1

ஜெருசலேம்,

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வரும் சனிக்கிழமை அடுத்தகட்டமாக மேலும் 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் சனிக்கிழமை பணய கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் நெதன்யாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லையென்றால் காசாவில் தாக்குதலை மீண்டும் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் ஆயுதக்குழு வரும் சனிக்கிழமை மேலும் சில பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்க தயாராகும்படி பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

இதன் மூலம் வரும் சனிக்கிழமை இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவில்லையென்றால் காசாவில் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article