எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்..?

3 hours ago 1

கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனைகள் பதினாறு வகை என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றை ஷோடச உபசாரங்கள் என்றும் சொல்வார்கள். அவற்றில் அபிஷேகம் என்பதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழில் குடமுழுக்கு என்று சொல்லப்படும் கும்பாபிஷேகம் என்பது, எந்த ஒரு தெய்வத்தின் ஆன்மிக ஆற்றலையும் நிலைப்படுத்தித் தரும் வகையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

சாமி விக்ரகங்களுக்கு நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்தநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு விதவிதமான திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்வதால் அந்த தெய்வ விக்ரகம் ஆன்மீக ஆற்றலை தன்னிடம் நிலைப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

குறிப்பிட்ட சாமி விக்ரகத்தின் அருளாற்றல் அபரிமிதமாக வெளிப்படுவதற்கு முக்கிய காரணம் அதற்கு நடத்தப்படும் அபிஷேகமே காரணம் என்பது ஒரு ஆன்மிக சூட்சுமம் ஆகும். எந்த அளவிற்கு அதிகப்படியான அபிஷேக திரவியங்கள் மூலம் பூஜைகள் நடத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கு விக்ரகங்கள் ஆற்றல் பெறுவதாகவும் ஐதீகம். அதன் மூலம்தான் அந்த சிலா விக்ரகத்திற்கு கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திர தகடுகள் மூலம் தொடர்ந்து ஆன்மிக ஆற்றல் கோவில் கருவறையில் இருந்து வெளிப்படும்.

அவ்வகையில், அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தங்களை பக்தர்கள் தங்கள் தலையிலும், உடலிலும் தெளித்துக் கொண்டு புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அந்த தீர்த்தம் நிரந்தரமாக சேமிக்கப்பட வேண்டும் என்பதற்காக கருவறையில் இருந்து கோமுகம் வழியாக அந்த அபிஷேக தீர்த்தம் நேராக கோவில் திருக்குளத்தைச் சென்று அடையும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

ஆகம விதிமுறைகளின்படி எந்த ஒரு அபிஷேகமாக இருந்தாலும் குறைந்தபட்சம் அது ஒரு நாழிகை அளவு அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கோவிலில் கடைபிடிக்கப்படும் பூஜை சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு இந்த கால அளவு கூடுதலாகவும் இருக்கும்.

 

அபிஷேகம் செய்யப்படும் பொருளுக்கு ஏற்ற பலாபலன்களை அந்த தெய்வ மூர்த்தம் அனுக்கிரகம் செய்வதாக சம்பிரதாயம். அந்த வகையில் எந்தெந்த பொருட்களை அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து ஆகமங்கள் குறிப்பிட்டுள்ளன.

அபிஷேக பொருட்களும் பலன்களும்

•சுத்தமான நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் மனம் சாந்தி அடையும்

•நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால் பக்தி ஏற்படும்

•சந்தனாதி தைலம் மூலம் அபிஷேகம் செய்தால் தேக சுகம் உண்டு

•வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்தால் ஆயுள் வலிமை

•மஞ்சள் பொடி அபிஷேகம் என்பது ராஜ வசியம் ஏற்படுத்தும்

•நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும்

•பஞ்சாமிர்த அபிஷேகம் என்பது தீர்க்காயுள் அளிக்கும்

•தேன் அபிஷேகம் செய்தால் சங்கீத ஞானம் ஏற்படும்

•வாழைப்பழம் அபிஷேகம் செய்தால் விவசாய லாபம் உண்டு

•மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் அனைவரும் வசியம் ஆவார்கள்

•பலாப்பழச்சாறு அபிஷேகம் உலக வசியம் ஏற்படுத்தும்

•திராட்சை பழச்சாறு அபிஷேகம் மன பயத்தை அகற்றும்

•மாதுளம் பழச்சாறு அபிஷேகம் பகை விலகும்

•நாரத்தம் காய்ச்சாறு அபிஷேகம் நல்ல சிந்தனையை ஏற்படுத்தும்

•தேங்காய் துருவல் அபிஷேகம் அரசு பதவி தரும்

•சர்க்கரை அபிஷேகம் பகைவரை வெற்றி கொள்ள வைக்கும்

•பால் அபிஷேகம் ஆயுள் விருத்தி தரும்

•தயிர் அபிஷேகம் சத்சந்தான பாக்கியம் ஏற்படும்

•இளநீர் அபிஷேகம் புத்திர பாக்கியம் கிடைக்கும்

•கரும்புச்சாறு அபிஷேகம் சாஸ்திர ஞானம் ஏற்படுத்தும்

•அரிசி மாவு பொடி அபிஷேகம் பிறவிப் பிணி அகற்றும்

•பஞ்சகவ்யம் அபிஷேகம் பாவ நிவர்த்தி ஏற்படுத்தும்

•எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம் எம பயத்தை அகற்றும்

•விபூதி அபிஷேகம் ஞானம் தரும்

•சந்தனம் அபிஷேகம் செல்வ வளத்தை ஏற்படுத்தும்

•கஸ்தூரி அபிஷேகம் வெற்றி கிடைக்கும்

•கோரோசனை அபிஷேகம் ஜெபம் சித்தி ஆகும்.

மேற்கண்ட விபரங்களின்படி தங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கு பக்தர்கள் அந்தந்த அபிஷேகங்களை செய்து பலன் பெறலாம்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Read Entire Article