நன்றி குங்குமம் டாக்டர்
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் பவித்ரா லட்சுமி. இவர், 2015 – ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
அதன்பிறகு, 2021 – இல் வெளியான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு அடையாளத்தை பெற்றுத் தந்தது. பின்னர், 2022 -இல் வெளியான நாய் சேகர், உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் பரத்துடன் ஜோடியாக நடித்து வெளியான ஒன்ஸ் அபான் ஏ டைம் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது. பவித்ரா, மாடலிங் துறையில் இருந்து திரைக்கு வந்தவர். மேலும், தேர்ந்த நடனக் கலைஞராகவும் இருந்துவருகிறார்.
இவர் 2015 -ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டமும், 2016 – இல் குயின் ஆஃப் இந்தியா என்ற அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். பவித்ரா, தனது தந்தை, தாயின் இழப்பு, தீ விபத்து என்று அடுத்தடுத்து பல சோதனையான சூழ்நிலைகளை சந்தித்தாலும், பீனிக்ஸ் பறவையை போல மீண்டு வந்து, தன் திரைப்பயணத்தை தொடர்கிறார். பவித்ராவின் ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை
ஒர்க்-அவுட்ஸ்: தினசரி ஒர்க்கவுட்டுக் காக பல மணி நேரம் செலவிடும் வழக்கம் என்னிடம் இல்லை. ஆனால், தினசரி நடனப் பயிற்சி உண்டு. ஏனென்றால், பள்ளி நாட்களில் அவ்வப்போது வெவ்வேறு இடத்தில் நடன நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். அதனால், ஒரு நிகழ்ச்சி முடிந்ததும், அடுத்த நிகழ்ச்சிக்கு பயிற்சியை தொடங்கிவிடுவேன். இதனால், தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் ஒர்க்கவுட் செய்ய நேரம் இருக்காது. இருந்தாலும், கல்லூரி முடிந்ததும் மாடலிங் துறையில் வந்ததும், நடைப் பயிற்சி, ஓட்டம், ஸ்ட்ரெச் பயிற்சிகள், பைலேட்ஸ், புஷ்அப் – புல்அப் பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் என ஒரு சில மணி நேரம் மட்டுமே சிம்பிளான பயிற்சிகள் மேற்கொள்கிறேன் அவ்வளவுதான்.
டயட்
டயட் விஷயத்தில் உணவே மருந்து என்பதை நன்கு உணர்ந்தவள் நான். ஏனென்றால் எனது 15 வயது வரை, அவ்வளவு குண்டாக இருப்பேன். தினசரி உணவில் இரண்டு கரண்டி நெய்யை போட்டுதான் என் பாட்டி எனக்கு உணவையே கொடுப்பார். இந்நிலையில், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினேன். அதில் நல்ல அடி. அதிலிருந்து நான் மீண்டு வர, சுமார் ஆறு மாத காலம் ஆனது. அந்த விபத்தினால் நன்றாக இளைத்து விட்டேன். அதுமுதல் விருப்பத்திற்கு சாப்பிட்டதெல்லாம் விட்டுவிட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள தொடங்கினேன்.
அந்தவகையில், காலை எழுந்ததும் தினசரி குறைந்தபட்சம் அரை லிட்டர் தண்ணீராவது குடித்துவிடுவேன். பின்னர், ஒரு ஸ்ட்ராங் காபி, அதன் பின்னர், காலை உணவாக இட்லி, தோசை என வீட்டில் என்ன கொடுக்கிறார்களோ அதுதான். பின்னர், 11 மணி அளவில் ஒரு கப் பழச்சாறு. மதியத்தில் கொஞ்சமாக சாப்பாடும், சப்பாத்தியும் எடுத்துக்கொள்வேன், பின்னர், மாலை மீண்டும் ஒரு காபி, இரவில் மீண்டும் இட்லியோ, தோசையோ எடுத்துக்கொள்வேன். அவ்வளவுதான் என்னுடைய தினசரி உணவு வழக்கம். இது தவிர, காய்கறிகள், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்வேன். மற்றபடி எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டேன்.
ப்யூட்டி
பொதுவாக பியூட்டி என்று எடுத்துக் கொள்ளும்போது சரும பாதுகாப்புதான் முக்கியமானது. சருமம் பொலிவாக இருந்தாலே, நாம் அழகாக காட்சியளிப்போம். எனவே, சரும பராமரிப்புக்கு முழுக்க முழுக்க ஆர்கானிக்கான, இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த க்ரீம்களையே பயன்படுத்துகிறேன். தலை முடி பராமரிப்பும் அப்படிதான். பெரிதாக தலைக்கு எந்த க்ரீமும் பயன்படுத்துவதில்லை. என் பாட்டி சிறு வயதில் சொல்லிக் கொடுத்தது போன்று இன்று வரை வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து தலை குளித்துவிடுவேன். வீட்டில் இருக்கும்போது தொடர்ந்து தலைக்கு எண்ணெய் வைப்பேன். இவ்வளவுதான் என்னுடைய சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்புகள்.
தொகுப்பு: தவநிதி
The post ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! பவித்ரா லட்சுமி appeared first on Dinakaran.