கும்பகோணம்: ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். கும்பகோணத்தில் அவர் அளித்த பேட்டி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கையினை ஒன்றரை மணி நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே வாசித்து முடித்தார். அவர் வாசிக்கும்போது மேஜையை எல்லோரும் தட்டியதை விட பிரதமர் தட்டியதுதான் அதிகம்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிப்பதற்குகூட நிதி அமைச்சராக தயாராக இல்லை. இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு சம்பளம் போட முடியவில்லை. கல்வி உதவித்தொகை கொடுக்கவில்லை. ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளது. மெட்ரோ-2 ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசாங்கத்தின் பங்களிப்பு இதுவரை கிடைக்கவில்லை. இப்படியே பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து அரசின் முன் வைக்கப்பட்ட போதும் இவைகள் குறித்து எல்லாம் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. ஆகவே இந்த நிதிநிலை அறிக்கை என்பது பொதுவான நிதிநிலை அறிக்கை இல்லை. ஒரு சார்பு நிதிநிலை அறிக்கை.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 8ம் தேதி(சனிக்கிழமை) காலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.