இவர்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; மிகச் சிறந்த சேஸர் கோஹ்லி: சொல்லி அடிப்பவர் ரோகித்: கெவின் பீட்டர்சன் புகழாரம்

2 hours ago 1

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோகித் சர்மா 32 ரன்களும், விராட் கோஹ்லி 190 ரன்களும் எடுத்தனர். இதனால் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:- இந்த 2 (ரோகித் சர்மா, விராட்கோஹ்லி) வீரர்களும் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். ரசிகர்களுக்கு பெரிய அளவில் பொழுதுபோக்கை கொடுத்திருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இந்த 2 வீரர்களுமே இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடும்.

அதிலும் விராட் கோஹ்லி இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த சேஸர். உலகத்திலே விராட் கோஹ்லியை மாதிரி ஏதேனும் சிறந்த சேஸர் யாராவது இருக்கிறார்களா? விராட் கோஹ்லியை விட இந்தியாவுக்கு அதிக போட்டிகளை வென்று கொடுத்த வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? அவருக்கான நாளில் விராட் கோஹ்லி பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடுவார். எல்லா நாளுமே எல்லாருக்கும் சிறப்பாக அமைந்துவிடாது. கோஹ்லி, ரோஹித் போன்ற வீரர்களை கிரிக்கெட்டில் பார்ப்பதே அபூர்வம். எனக்கு விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா இருவருமே பிடிக்கும். ரோஹித் சர்மா அணிக்கு வந்தது எனக்கு இன்னும் நினைவுக்கு இருக்கின்றது. ரோகித் சர்மா மீது ஆரம்பத்தில் இப்படித்தான் விமர்சனங்கள் வைத்தார்கள்.

ஆனால் அவர் தான் ஒரு ஸ்பெஷலான வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். ரோகித் சர்மாவை இந்திய அணி பத்திரமாக கையாள வேண்டும். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதையும் பாருங்கள். ஆஸ்திரேலியாவுக்கு சென்று அவர் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் சிறந்த ஒன்று. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு வீசப்படும் வேகப்பந்து வீச்சை சிக்ஸர்களுக்கு விரட்டியது எல்லாம் யாராலும் மறக்க முடியாது. உங்களது பந்தை சிக்ஸருக்கு அடிப்பேன் என்று சொல்லியே ரோகித் சர்மா விளையாடுவார். ரோகித் சர்மா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகச் சிறந்த வீரராகவே இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post இவர்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; மிகச் சிறந்த சேஸர் கோஹ்லி: சொல்லி அடிப்பவர் ரோகித்: கெவின் பீட்டர்சன் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article