பல்வேறு தொழில்கள் நிறைந்த நகரம் கோவை. இருப்பினும் விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாகவே உள்ளது. 30 சதவீதம் பேர் இன்றளவும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்னை, பாக்கு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், முட்டை கோஸ், காலிபிளவர், மக்காச்சோளம், காய்கறிகள், கறிவேப்பிலை என பல பயிர்கள் கோவையில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், காட்டு யானை, காட்டுப்பன்றி, மயில்கள் போன்ற வனவிலங்குகளின் தொல்லை, போதிய வருமானம் கிடைக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணத்தினால் சில விவசாயிகள் வேளாண் தொழிலில் இருந்து பின்வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் விவசாய நிலங்களை விற்று ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வருமானம் அதிகம் கிடைக்கும் ெதாழில்களில் ஈடுபடுகிறவர்களும் பெருகி வருகிறார்கள். இவர்களுக்கு இடையே சிறப்பான முறையில் விவசாயம் பார்த்து வருமானம் அள்ளுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு விவசாயத்தில் முத்திரை பதிக்கும் சாதனையாளர்களை நாம் வாரந்தோறும் அடையாளம் கண்டு வெளி உலகிற்கு கொண்டு வருகிறோம். இந்த வரிசையில் தனது 95 வயதிலும் விவசாயத்தை விட்டுவிடாமல், தனது உயிர்மூச்சென தொடர்ந்து வருகிறார் கோவையைச் சேர்ந்த விசாலாட்சி என்ற மூதாட்டி.
கடந்த 70 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது முழுக்க இயற்கை வழியில் வெள்ளாமை பார்க்கிறார். தனது தோட்டத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல வருமானமும் பார்க்கிறார். தினமும் தோட்டத்திற்குச் சென்று பாக்கு மட்டைகளை எடுத்து வந்து, அதனைக் காய வைத்து விற்பனை செய்கிறார். தனது 4 ஏக்கர் பாக்குத் தோட்டத்தில் ஊடுபயிராக மிளகைப் பயிரிட்டு, அதன்மூலமும் தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்கிறார். இந்த முன்மாதிரி விவசாயியைத் தேடி தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவம்பட்டிக்கு பயணித்து, பசுஞ்சோலையாக காட்சியளிக்கும் அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.“விவசாயம்தான் நாட்டுக்கு சோறு போடும். இந்த விவசாயத்தை விட்டுடாதீங்க. இன்றைய சூழல்ல விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது. கூடவே ஏதாவது ஒரு தொழில் செய்யுங்க’’ என்ற ஆலோசனையோடு பேச ஆரம்பித்தார்.
“எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. எங்க அப்பா கூட இருக்கும்போதே எங்க காட்டில் விவசாயம் செய்து வந்தேன். அப்புறம் எனக்கு திருமணம் நடந்துச்சு. எங்களுக்கு மூனு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த பொண்ணு பூமணி. அப்புறம் ஈஸ்வரன் மூர்த்தி, வசந்தா மணி, பழனிசாமி, சந்திரா காந்தி என 4 குழந்தைகள். என் கணவரை மிசா காலத்துல 13 நாள் போலீஸ் புடுச்சுட்டு போயிட்டாங்க. அவர் எங்க போனார், என்ன ஆனார் கூட எனக்கு தெரியல. அப்போ என் குழந்தைகளுக்காக என் விவசாயப் பணியை மீண்டும் துவங்கினேன். அப்போது இந்தப் பகுதியில் மக்காச்சோளம், கம்பு, ஐஆர் எட்டு, சின்ன கிச்சடி அரிசி, சம்பா நெல், ஆனை கொம்பு போன்றவை பயிரிட்டு வந்தாங்க. இது எல்லாம் இப்போ இல்லை. கிணற்றில் இறங்கிதான் தண்ணீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சணும். மோட்டார் எல்லாம் கிடையாது. 30 மாடுகள் இருக்கும். பால் கறக்கணும். நாள் முழுவதும் வேலையாக இருக்கும். என் கணவர் ஜெயிலுக்கு போயிட்டு வந்த 2 வருஷத்தில் இறந்து போயிட்டார். அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் விவசாயம் செஞ்சுட்டு வரேன். எனக்கு விவசாயம் தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த காலத்துல யானை, காட்டுப்பன்றி பிரச்னை இல்லை. இப்போ ரொம்ப அதிகமாக இருக்கு.
நெல், கரும்பு, காய்கறி விவசாயம் செய்ய முடிவதில்லை. இப்போ 4 ஏக்கர் காட்டில் பாக்கு, தென்னை போட்டு இருக்கேன். இதுல ஊடுபயிரா மிளகு போட்டு இருக்கேன். இந்த மிளகு அறுவடைக்கு தயாரா இருக்கு. எல்லா பயிர்களுக்கும் பழைய நடைமுறையில் இயற்கை உரம் மட்டும்தான் போடுறேன். இதனால் என் தோட்டத்தில் விளையும் மிளகை வாங்க பலர் தயாரா இருக்காங்க. கிலோ ரூ.600க்கு விற்பனை செய்கிறேன். பாக்கு மட்டையை சேகரித்து காய வைத்து ஒரு மட்டை ரூ.3க்கு விற்பனை செய்றேன். காலையில் பழைய சோறுதான் சாப்பிடுவேன். சமையல் நானே செய்வேன். வெயிலுக்கு பிறகு தோட்டத்திற்குள் போய் சுற்றிப் பார்த்து பயிர்களைப் பராமரிப்பேன். எனக்குத் தேவையான பயிர்களை வீட்டின் முன்பே பயிரிட்டு இருக்கேன். தக்காளி, கறிவேப்பிலை, பிரண்டை, புதினா, கரும்பு, மா, கொய்யா போன்றவையும் பயிரிட்டு பராமரித்து வரேன். என் உயிர் இருக்கும் வரை விவசாயம் செய்வேன். எல்லோரும் விவசாயம் செய்யணும். குறிப்பா இளைஞர்கள் விவசாயத் தொழிலுக்கு வரணும். அவங்க ஏதாவது ஒரு தொழிலைச் செய்துகிட்டே விவசாயத்தைப் பார்க்கணும்’’ என அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வலியுறுத்தி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு:
விசாலாட்சி: 98650 51301.
The post 95 வயது மூதாட்டியின் சாதனைப் பயணம்! appeared first on Dinakaran.