![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35815819-srdci.webp)
புதுடெல்லி,
நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் இன்று நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும். பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதனை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் கொண்டு கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயுத படைகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் 93 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்குவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இவற்றில், வீரர்கள் மறைந்த பின்னர் வழங்கப்படும் 11 விருதுகளும் அடங்கும். இதன்படி, 2 கீர்த்தி சக்ரா விருதுகளும் (ஒரு வீரருக்கு மறைவுக்கு பின்), 14 சவுரியா சக்ரா விருதுகளும் (3 வீரர்களுக்கு மறைவுக்கு பின்), பார் சேனா பதக்கம் (வீரதீர செயல்), 66 சேனா பதக்கங்கள் (7 வீரர்களுக்கு மறைவுக்கு பின்), 2 நவோ சேனா பதக்கம் (வீரதீர செயல்) மற்றும் 8 வாயு சேனா பதக்கங்களும் (வீரதீர செயல்) அடங்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.
குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு தலைவர் என்ற அடிப்படையில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோவுக்கு இந்தியா சார்பில் அழைப்பு விடப்பட்டது. இதன்படி, இந்தியாவுக்கு அவர் நேற்று வருகை தந்துள்ளார். அவருடைய முதல் இந்திய பயணம் இதுவாகும்.
அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். இதன்பின்பு அவருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இன்று நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.