ஏரல்: பெருங்குளம் சிவன் கோயில் தேர், 75 ஆண்டுகளாக பழுதாகி நிற்பதால் அரசு நடவடிக்கை எடுத்து புதிய தேர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அடுத்த பெருங்குளத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோமதி அம்பாள் உடனுறை திருவழுதீஸ்வரர் கோயில் பிரசித்திப் பெற்றதாகும். சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு தினமும் பெருங்குளம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் திருவிழாவின் போது முன்பு தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்த தேரானது பழுதாகி கடந்த 75 ஆண்டுகளாக ஓடாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருப்பதால் சிதிலமடைந்து சிற்பங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போதைய தேரின் நிலைமை, பக்தர்கள் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து பெருங்குளம் சிவன் கோயிலுக்கு புதிய தேர் செய்து கொடுத்து தேரோட்டத்தை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார் கூறுகையில், ‘‘இக்கோயில் திருவிழாவின் சிறப்பே தேரோட்டம் தான் என்று முன்னோர் சொல்லிக் கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் இந்த தேரானது பழுதாகி, சிற்பங்கள் அனைத்தும் உடைந்து போய் உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ கோயில்களில் பழுதான தேர்களை எல்லாம் சீரமைத்து ஓடவிட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. அதேபோல் பெருங்குளத்தில் அமைந்துள்ள இந்த பழமைவாய்ந்த திருவழுதீஸ்வரர் என்ற சிவன் கோயில் தேரையும் புதிதாக செய்து ஓட விட நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.
The post 75 ஆண்டுகளாக ஓடாமல் சிதிலமடைந்தது; பெருங்குளம் சிவன் கோயிலுக்கு புதிதாக தேர் செய்து தரப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.