சென்னை: ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 3வது வழித்தடம் மற்றும் மாதவரம் – கோயம்பேடு வரை 5வது வழித்தடத்தில் 70 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் 26 மெட்ரோ ரயில்களும், கோயம்பேடு முதல் எல்காட் சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்தில் 42 மெட்ரோ ரயில்களும் என மொத்தம் 138 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்த 3 வழித்தடங்களிலும் பணிகள் முடிந்தபிறகு, ஒட்டுமொத்தமாக 173 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இருக்கும். தினசரி 25 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் விதமாக அமையும். இது பொது போக்குவரத்து பயணிகளில் 25 சதவீத அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, முதல் ஓட்டுநர் இல்லாத ரயில் கடந்த மாதம் தயாரிக்கப்பட்டு மெட்ரோவிற்கு வழங்கப்பட்டது. அது தற்போது பூந்தமல்லி டெப்போவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது : இரண்டாம் கட்ட திட்டத்தின் 3 மற்றும் 5வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளை உருவாக்குவதற்கான இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனம் குறைந்த விலையில் ஏலம் எடுத்துள்ளது. இதற்காக ஒப்பந்தந்தை வழங்க சில ஒப்புதல்கள் தேவைக்கப்பட்டன. அதேபோல் மாநில அரசு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்த பின்னரே இதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அடுத்த மாதத்திற்கு வழங்கப்பட உள்ளது.
அதன்படி இரண்டாவது ஒப்பந்தத்தின்படி இந்நிறுவனமானது 210 பெட்டிகள், அதாவது மூன்று பெட்டிகள் கொண்ட 70 ரயில்களை தயாரிக்கும். இதற்காக 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3600 கோடியில் தயாரிக்கப்படும் இந்த ரயில் பெட்டிகள் பெங்களூருவில் தாயாரிக்கப்பட உள்ளது. மேலும் முதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 4வது வழித்தடத்தில் இயங்குவதற்கு 108 பெட்டிகள் கொண்ட, 36 ரயில்கள் தேவைப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திலும் சுமார் 1000 பயணிகளை பயணிப்பார்கள். மேலும் ஓட்டுநர் இல்லாத ரயில் என்பதால் ஆரம்பத்தில் ரோவிங் உதவியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post 70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.