
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 78). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றார். அங்கு 7 வயது சிறுமி, தனது பெற்றோருடன் தோட்டத்தில் மல்லிகை பூக்கள் பறித்து கொண்டிருந்தாள். இதையடுத்து சிறிது நேரம் ஜெயராமன், அந்த சிறுமியுடன் சேர்ந்து பூக்கள் பறித்து கொண்டிருந்தார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ஜெயராமன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயராமனை பிடித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தோட்டத்தில் வைத்து 7 வயது சிறுமிக்கு ஜெயராமன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமன் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.