
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ். குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவரை ரூ. 3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.