50 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் புதுப்பொலிவுடன் தயாராகிறது மெரினா நீலக்கொடி கடற்கரை: சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: இந்த மாதம் இறுதியில் திறப்பு

3 hours ago 3

சென்னை: சென்னை மெரினாவில் 50 ஏக்கர் பரப்பளவில் நீலக்கொடி கடற்கரை திட்டம் தயாராகி வருகிறது. சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த மாதம் 3வது வாரம் திறக்கப்படுகிறது. உலகின் மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடமும், இந்தியாவில் முதலிடமும் பிடித்திருப்பது சென்னை மெரினா கடற்கரை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரைக்கு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி சான்றிதழ் கிடைக்க உள்ளது.

மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், கார் போன்ற வாகனங்கள் மூலம் எளிதில் செல்லும் வகையில் நகர் பகுதியில் உள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி செல்லும் எல்லாரும் ஒரு இனிமையான அனுபவத்தை உணருகின்றனர். மாலையில் கடற்கரையில் கலைப்பொருட்கள், கைவினை, இன நகை மற்றும் உணவு பொருட்கள் விற்பனை களைகட்டும். குழந்தைகள் விளையாட சிறந்த இடமாகும்.

இதேபோன்று, சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரை, பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளையும் மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை கடற்கரைகளுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சென்னையின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை விளங்குவதால், திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தற்போது, இந்த பகுதியில், கட்டுமானங்கள் தொடர்பாக பரிசோதனைகளை சென்னை மாநகராட்சி முடித்துள்ளது. அடுத்தகட்டமாக, தண்ணீர் பரிசோதனையை முடித்து, வரைபடங்களுடன் தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. 250 ஏக்கரில் மெரினாவில் மற்றொரு நீலக் கொடி நீட்டிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பகுதி விரைவில் நீலக் கொடி மண்டலமாக மாற உள்ளது.

ரூ. 6 கோடி நிதியுதவியுடன் சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச் சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை இடம்பெற உள்ளது. இங்கு வணிகர்கள் கடைபோடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மெரினா முழுவதும் படிப்படியாக இதேபோல் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளான நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரை உள்ளது. இந்த சான்றிதழ் தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா கடற்கரையை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒருபடி நெருங்கிவிட்டன.

தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் விரிவான திட்ட அறிக்கைகளை இதற்காக தயாரித்து உள்ளது. தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றளிப்பு திட்டத்திற்கான தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும். மேலும் இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இது நீல கடற்கரையாக சான்றளிக்கப்பட்டது. மெரினா நீலக் கொடி கடற்கரையை மே மூன்றாவது வாரத்தில் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதவாது: 50 ஏக்கர் பரப்பளவில் மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. மெரினா கடற்கரையில் சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அனைத்தும் தயாராகி விட்டது. மேலும் கழிவறைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்கள், குளியல் அறைகள் கட்டும் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையும். தண்ணீர் மாதிரிகள் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. கடற்கரை, வரலாறு, இதர விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகளை சென்னை மாநகராட்சி அமைக்கிறது.

இந்த கடற்கரைக்கு வர கட்டணம் எதுவும் கிடையாது. டெண்டர் நிபந்தனைகளில் இருந்த தடைகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் எந்த தடையும் இருக்காது. கடற்கரையை பராமரிக்க ஒரு கான்ட்ராக்டரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். 3 வருடத்திற்கு 6 கோடி ரூபாய் செலவாகும். சுமார் 12 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்வார்கள். இந்த செலவை சென்னை மாநகராட்சியே ஏற்கும். ராயபுரம் மண்டலத்தில் குப்பையை சுத்தம் செய்யும் உர்பேசர் சுமித் நிறுவனத்துக்கு இந்த ப்ளூ ஃபிளாக் கடற்கரையை பராமரிக்கும் கூடுதல் பொறுப்பு கொடுக்க இருக்கிறார்கள். மெரினாவில் 250 ஏக்கரில் மற்றொரு ப்ளூ ஃபிளாக் கடற்கரையை உருவாக்கவும் திட்டம் இருக்கிறது.இவ்வாறு கூறினார்.

The post 50 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் புதுப்பொலிவுடன் தயாராகிறது மெரினா நீலக்கொடி கடற்கரை: சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: இந்த மாதம் இறுதியில் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article