திருவொற்றியூர்: எர்ணாவூரில் கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. 3 மணி நேர போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மதுரையை சேர்ந்தவர் இளஞ்செழியன் (39). மணலி புதுநகரில் தங்கி கன்டெய்னர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் வந்த 40 அடி நீளம் கொண்ட கன்டெய்னரை டிரெயிலர் லாரியில் ஏற்றிக்கொண்டு, மணலிபுதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு புறப்பட்டார். எண்ணூர் விரைவு சாலையில் எர்ணாவூர் ராமகிருஷ்ணாநகர் சந்திப்பு வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் இளஞ்செழியன் இடிப் பாட்டில் சிக்கி தவித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து இளஞ்செழியனை பத்திரமாக மீட்டனர்.
இதில் அவரது கை, முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் லாரியும், கன்டெய்னர் பெட்டியும் சாலை குறுக்கே கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து ராட்சத பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு கவிழ்ந்துகிடந்த லாரியையும், கன்டெய்னர் பெட்டியும் தூக்கி ஓரமாக நிறுத்தினர். 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து பால்பண்ணை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.
The post எர்ணாவூரில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.