5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. இந்திய அணி 210 ரன்கள் சேர்ப்பு

5 hours ago 3

வொர்செஸ்டர்,

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே - சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே ஒரு ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய விஹான் மல்ஹோத்ரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வழக்கமாக அதிரடியாக விளையாடும் சூர்யவன்ஷி இந்த முறை நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 33 ரன்களில் அவுட்டானார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இருப்பினும் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (66 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி இந்திய அணி 200 ரன்களை தொட உதவினார். முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரஞ்சு மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

Read Entire Article