37வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

3 weeks ago 5


சென்னை: 37வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில் போது, ”எம்.ஜி.ஆரின் புகழை, எந்நாளும் காப்போம்! எந்நாளும் காப்போம். எம்.ஜி.ஆர். தமிழ் மண்ணை தாயாகவும்; தமிழ் மக்களை உயிராகவும் நேசித்தவர். அதிமுகவினரை, ரத்தத்தின் ரத்தங்களாக பூஜித்தவர். தூய உள்ளம் கொண்ட, தாய்மைப் பாசம் கொண்ட, எம்.ஜி.ஆர். அவர் வகுத்துத் தந்த பாதையில், தடம் மாறாது; தடுமாறாது! சோர்ந்து போகாது; சோரம் போகாது! ஒற்றுமை உணர்வோடு, பயணிப்போம்! பயணிப்போம். துரோகிகளை வீழ்த்துவோம். எம்.ஜி.ஆர். மண்ணை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சை விட்டு மறையாத, அவரின் வழியிலே; பயணிப்போம்.

அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு, அதிமுகவை அழைத்து வந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியிலேயே, தொடர்ந்து பயணிப்போம்” என்று சூளுரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலு மணி, பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சசிகலாவும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

The post 37வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article