புல்வாயோ: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா அணியின் தற்காலிக கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டிருக்கிறார். புல்வாயோவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டிய வியான் முல்டர் 324 பந்துகளில் 350 ரன்கள் எடுத்தார். 2ம் நாள் தான் போட்டி நடைபெறுகிறது என்பதால் பிரையன் லாராவின் 400 ரன்கள் ஸ்கோரை வியான் முல்டர் முறியடிப்பார் என உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். 367 ரன்கள் எடுத்து முல்டர் களத்தில் இருந்தார். அவர்தான் கேப்டன் என்பதால் அவர் நினைத்திருந்தால் 400 ரன்களை கடந்திருக்க முடியும். ஆனால் வியான் முல்டர் ஆட்டத்தை டிக்ளேர் செய்து கொள்வதாக அறிவித்தார்.
5 விக்கெட்டுகளை இழந்த தென்ஆப்பிரிக்க அணி 626 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை உடைக்க வாய்ப்பு இருந்தும் ஏன் அதனை வியான் முல்டர் தவறவிட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசிய முல்டர் “முதலில் நான் என்ன நினைத்தேன் என்றால், நாங்கள் தேவையான ஸ்கோரை எடுத்துவிட்டோம். எனவே பந்துவீச இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். மற்றொரு காரணம் பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் அவருடைய சாதனைகள் உடைக்கப்படாமல் இருக்கட்டும். அவர் 400 எடுத்திருந்தார். அதுவும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருக்கின்றார். அந்த இன்னிங்ஸ் உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் போன்ற ஜாம்பவானுக்கு தான் இந்த ரெக்கார்ட் ஸ்பெஷலாக இருக்கும். எனக்கு மீண்டும் இதுபோல் 400 ரன்களைக் கடக்க வாய்ப்பு இருந்தால், நிச்சயம் நான் மீண்டும் இதே முடிவை தான் எடுப்பேன். இதுகுறித்து நான் என் பயிற்சியாளரிடமும் கூறிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். லாரா போன்ற ஜாம்பவான்களுக்கு அது போன்ற பெரிய ஸ்கோர் உரிதாக இருக்கட்டும். அதேபோல் நான் டிக்ளேர் செய்யாமல் விளையாடி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யாராலும் உறுதியாக சொல்லி இருக்க முடியாது. ஆனால் லாராவின் ரெக்கார்ட் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் முச்சதம் தற்போது அடித்திருக்கின்றேன்’’ என்றார்.
The post 367 ரன்னில் ஆட்டத்தை முடித்தது ஏன்? 400… ஜாம்பவான் லாராவுக்குதான் பொருத்தமாக இருக்கும்: தென்ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.