பரீட்சையில் தோல்வி அடைந்தால் குழந்தைகளை பொதுவாக திட்டும் பொழுது ‘ஒரு 35 மார்க் கூட உன்னால் எடுக்க முடியாதா?’ இப்படி கேட்டு தான் நாம் திட்டுகிறோம். ஆனால் அந்த 35 மார்க் எடுக்கக்கூட ஒரு பெரிய உழைப்பை ஒரு குழந்தை கொடுத்தாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லும் படம்தான் இந்த 35 சின்ன விஷயம் இல்ல திரைப்படம். பிரசாத்- சரஸ்வதி ஆந்திரா, திருப்பதியில் வாழ்ந்து வரும் ஒரு பிராமண குடும்பம். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அருண், வருண். ‘மதிப்பே இல்லாத பூஜ்ஜியம் பக்கத்தில் 1 வந்தவுடன் எப்படி ஒன்பதை விட கூடுதல் மதிப்பு பெறுகிறது ?’ … இந்தக் கேள்விக்கு எந்த ஆசிரியரும் சரியான விடை கூறாததால் கணித பாடம் என்றாலே கசக்கிறது சிறுவன் அருணுக்கு.தொடர்ந்து அவன் கேட்கும் விவாத ரீதியிலான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல தடுமாறுகிறார்கள் ஆசிரியர்கள். இதனால் அருண் படிக்காத மாணவனாகவே ஆசிரியர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறான். இதில் புதிதாக வரும் கணக்கு வாத்தியார் மாணவர்களை அவர்களின் மார்க்குகளை வைத்து அழைக்கும் பழக்கம் உள்ளவர். அருணை பூஜ்ஜியம் என்று அழைக்கிறார். மேலும் எப்படியாவது அவனது படிப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என பல முயற்சிகள் செய்கிறார். இதற்கிடையில் தன் குழந்தையை எப்படியேனும் படிக்க வைத்து 35 மார்க் ஆவது எடுக்க வைத்து விட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள் அருணின் பெற்றோர். அதில் குறிப்பாக அருணின் அம்மா சரஸ்வதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் என்கிற நிலையில் அருணுடன் சேர்த்து சரஸ்வதியின் அறிவும் சோதிக்கப்படுகிறது. இப்படியான காலகட்டத்தில்தான் கணிதத்தை இயல்பான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் என சரஸ்வதிக்கு பயிற்சி கொடுக்கிறார் பத்திரிகையாளர் சாரதா. இந்த சோதனையில் அம்மாவும் மகனும் சேர்ந்து ஜெயித்தார்களா இல்லையா என்பதை இப்போதைய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடமாகவே எடுத்திருக்கிறது இந்த ‘35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம்.
பொதுவாக இப்படியான படங்களில் அதீத பெண் சுதந்திரம் மற்றும் பெண்ணிய புரட்சி, கல்வித் திட்டங்கள் மீதான கேள்விகள், குடும்ப உறவுகள் மீதான குழப்பங்கள் இப்படி அனைத்தையும் சொல்லி பார்வையாளர்களை குழப்பு வார்கள். ஆனால் இந்த படம் அப்படி எதுவும் திணிக்காமல் வகுப்பில் பின் தங்கிய மாணவன் அல்லது அதிகமாக கேள்வி கேட்கும் குழந்தை இவர்களை எப்படி சமாளித்து அவர்களுக்கு புரியும் விதத்தில் பாடம் கற்பித்து அவர்களையும் சேர்த்து முன்னேற்றிக் கொண்டு வர முடியும் என்னும் எக்காலத்திலும் தேவைப்படும் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். புரியாத வாத்தியாருக்கு அவர் பாணியிலேயே புரிய வைப்பது, அவரையும் எங்கேயும் மரியாதை குறைவாக நடத்தாமல் ஒரு ஆசிரியருக்கான மரியாதையுடன் எப்படி அவருக்கும் விளங்க செய்வது மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை ஏதோ ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டோம் என அவரவர் வேலையை பார்க்காமல் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என மிக அற்புதமாக காட்சிகள் விவரிக்கின்றன. கணவன் மனைவி பந்தத்தையும் அவ்வளவு சுலபமாக யாரும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது இருவருக்கும் குடும்பத்தில் எத்தனை பொறுப்புகள் இருக்கின்றன யாருக்கு இதில் எவ்வளவு பொறுப்புகள் இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்னும் குடும்பங்களுக்கான பாடத்தையும் எளிமையாக சொல்லிச் செல்கிறார் இயக்குனர் நந்தா கிஷோர் இமானி. மேலும் பிரின்ஸ்பல் புஜ்ஜி ரெட்டி குழந்தைகளை இப்படி நடத்தக்கூடாது என கணக்கு வாத்தியாருக்கு வகுப்பு எடுத்து மாணவர்கள் பக்கம் நிற்கும் தருவாயும் அருமை. சரஸ்வதியாக நிவேதா தாமஸ், பிரசாத்தாக விஷ்வதேவ், சாரதாவாக கௌதமி, பிரின்ஸ்பல் புஜ்ஜி ரெட்டியாக பாக்யராஜ், கணக்கு வாத்தியார் சாணக்யா வர்மாவாக பிரியதர்ஷி புலிகொண்டா என்ற படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அம்மா கதாபாத்திரத்தில் வரும் நிவேதா தாமஸ் மிகப்பெரிய பலம். தெலுங்கு படமாகவும் தமிழில் டப்பிங் ஆகவும் வெளியாகி இருக்கும் இப்படம் நிச்சயம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக மாறி இருக்கிறது ‘35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம்.
– மகளிர் மலர் குழு.
The post 35 சின்ன விஷயம் இல்ல! appeared first on Dinakaran.