₹3.95 கோடி மதிப்பில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

3 weeks ago 5

திருவாரூர், டிச.24:திருவாரூரில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார். கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மக்களுக்கான திட்டங்கள் மட்டுமின்றி பழுதடைந்த அரசு கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் கட்டி அரை நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்து விட்டதால் இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட பழுது காரணமாகவும், பணியாளர்களுக்கான இதற்குரிய இடவசதி கருதியும் கூடுதலான பரப்பளவில் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று தற்போது முடிவு பெற்றுள்ளது.

அதன்படி, திருவாரூரில் ரூ. 3கோடியே 95 லட்சம் மதிப்பிலும், முத்துப்பேட்டையில் ரூ 3 கோடியே 84 லட்சம் மதிப்பிலும், நீடாமங்கலத்தில் ரூ3 கோடியே 81 லட்சம் மதிப்பிலும் மற்றும் கோட்டூரில் ரூ.5 கோடியே 22 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.16 கோடியே 82 லட்சம் மதிப்பில் 4 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் நேற்று திறந்து வைத்தார். திருவாரூர் ஒன்றிய அலுவலகமானது தரைதளம் மற்றும் முதல் தளம் என மொத்தம்17ஆயிரத்து 323சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கலெக்டர் சாரு தலைமையிலும், நாகை எம்பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா ஆகியோர் முன்னிலையிலும் இந்த புதி ய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், ஒன்றிய குழு துணை தலைவர்கள் திருவாரூர் துரை தியாகராஜன், கொரடாச்சேரி பாலச்சந்தர், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ்மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணகி மற்றும் பிரகாஷ், அலுவலக மேலாளர்கள் சிவனேசன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post ₹3.95 கோடி மதிப்பில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article