வேன் கவிழ்ந்து விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான முட்டை உடைந்து நாசம்

2 hours ago 2

மோகனூர்: மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.1 லட்சம் மதிப்பிலான முட்டை உடைந்து நாசமானது. இடிபாடுகளுக்குள் சிக்கி இளம்பெண் படுகாயமடைந்தார். நாமக்கல்-மோகனூர் சாலை நல்லையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (47). இவர், நாமக்கல்லில் இருந்து சரக்கு வேனில் முட்டைகளை ஏற்றிச் சென்று திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சில்லரையில் விற்பனை செய்து வருகிறார். நேற்று நாமக்கல்லில் இருந்து வழக்கம்போல் சரக்கு வேனில் முட்டை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் புறப்பட்டுள்ளார். அவருடன் உறவினர் குமாரி (21) என்பவரும் சென்றுள்ளார். திருச்சி சாலை என்.புதுப்பட்டி பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறிய வேன் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த குமாரி அலறி துடித்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் வேனில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் மதிப்பிலான முட்டைகள் மற்றும் முட்டை அட்டைகள் உடைந்து சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து மோகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வேன் கவிழ்ந்து விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான முட்டை உடைந்து நாசம் appeared first on Dinakaran.

Read Entire Article